சில விஷயங்களை சொல்ல வேண்டியதுள்ளது. இந்த ஆட்சி வந்ததற்கு பிறகு
நிறைய அதிரடி மாற்றங்களை கண்டு வருகிறேன். ஆரம்பத்தில் ‘உங்கள்
கட்டணத்தில் 43% பங்கு சாமான்யர்களால் வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு
தெரியுமா ? என்று செய்தி வந்து கொண்டே இருந்தது. இப்போதும் இதை
பார்க்கலாம். அரசின் மானியத்தில் பயணம் செய்வதாக உங்களை குற்ற உணர்ச்சியில்
தள்ளி மறைமுகமாக எதிர்கால கட்டண உயர்வை ஏற்றுக் கொள்வதற்கான முயற்சி தான்
இது. சரி, தொலையட்டும்.
பிறகு,
டிக்கட் பதிவு செய்யும் போது காப்பீடு வேண்டுமா, வேண்டாமா என்று
கேள்வியில் வேண்டும் என்ற வாய்ப்பின் மீது தேர்வு செய்யுமாறு தான்
உருவாக்கியிருந்தார்கள். வேண்டாம் என்பவர்கள் அந்த வாய்ப்பை நிராகரித்து
பதிவு செய்ய வேண்டும். தத்கல் டிக்கட் பதிவு செய்ய வேண்டும் என்ற
அவசரத்தில் இருப்பவர்களுக்கு இதையெல்லாம் பார்ப்பதற்கு நேரம் இருக்காது.
எனவே, விரும்பியோ விரும்பாமலோ பெரும்பாலோர் காப்பீட்டிற்கும் சேர்த்து பணம்
கட்டி வந்தார்கள்.
தற்போது
வேண்டாம் என்ற வாய்ப்பே உங்களுக்கு இல்லை. அதை நீங்கள் நிராகரிக்கவே
முடியாத அளவிற்கு ‘ரேடியோ பட்டனை’ செயலிழக்க செய்திருக்கார்கள். ஒரு
பயணிக்கு 92 பைசா என்றாலும் ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் டிக்கட்டுகள் பதிவு
செய்யப்படுகின்றன என்பதை கணக்கிட்டோமானால் ஒரு மாதத்திற்கு நிச்சம்
கோடிக்கணக்கில் வருவாய் அதிகம். சரி தொலையுது, 92 பைசா தானே அரசுக்கு
பிச்சை போடுவது போல என்று எண்ணினால் டிக்கட் வந்த அடுத்த நொடி ‘ராயல்
சுந்தரம்’, ‘ஐசிஐசிஐ லொம்பார்ட்’, ‘ஸ்ரீராம் ஜெனரல்’ போன்ற தனியார்
காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து ‘தங்கள் நிறுவனத்தை தேர்வு செய்ததற்காக
நன்றி’ சொல்லி குறுஞ்செய்தி வரும். நானாடா உங்களை தேர்வு செய்தேன் என்று
கொலை வெறி வரும். நாட்டில் நான்கு அரசு காப்பீட்டு நிறுவனங்கள் இருக்க இது
போல விபத்து நடக்க குறைவான வாய்ப்புள்ள அதிக லாபம் ஈட்டக் கூடிய வாய்ப்பை
யாராவது தனியார் முதலாளிகளுக்கு விட்டுத் தருவார்களா? ஆனால், தேசபக்தர்கள்
தருவார்கள்.
இதேபோல மூத்த
குடிமக்களுக்கான கட்டண சலுகையின் பாலும் கவனத்தை திருப்பியிருக்கிறார்கள்.
பெயர் உள்ளீடு செய்யும் போதே ‘கட்டண சலுகையை துறக்க விரும்புகிறேன்’ என்ற
வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் மறந்து விட்டாலும் அடுத்த பணம் கட்டும்
போது ஒரு பெட்டி நினைவூட்டுகிறது. சரி, சலுகை வேண்டாமென்ற வாய்ப்பிருக்கும்
தேசபக்தர்கள் துறக்கலாம் என்றால் ஒரு திருடனை போல ‘சலுகையை துறக்க
விரும்புகிறேன்’ என்ற வாய்ப்பை (default option) தேர்ந்தெடுக்குமாறு
அமைத்திருக்கிறார்கள். நீங்கள் சலுகை வேண்டுமென்றால் அதை விட்டு வெளியே
வந்து இன்னொரு ரேடியோ பட்டனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதே
வரிசையில் தான், தற்போது ஏ/சி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு போர்வை
தரப்படாது. வேண்டுமென்றால் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்ற வாய்ப்பை
தருகிறார்கள். நான்கு பேர் பயணம் செய்தால் நான்கு போர்வைகளை உடன் எடுத்துச்
செல்ல வேண்டும். இல்லையென்றால் நான்கு போர்வைகளை விலைக்கு வாங்க
வேண்டும்.
ஊழல் ஊழல்
என்று லாலு பிரசாத் யாதவை கூசாமல் சொல்பவர்கள் அவர் அமைச்சராக இருந்த போது
இப்படி எல்லாம் மக்களிடம் சிறுக சிறுக திருடாமலேயே ரயில்வே லாபத்தில் தான்
இயங்கியது. நேர்மையின் சின்னமாக, ஊழலற்ற ஆட்சியை வழங்குவதாக கோரும்
நல்லவர்களின் ஆட்சியில் தான் கோவணத்தையும் உருவ நினைக்கிறார்கள். உருவினால்
கூட பரவாயில்லை. ஆனால், இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் திருடும்
பணத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் உணவு, சமையல் எரிவாயுவுக்கு கூட
செலவிட மாட்டேன் என்றால் வேறு எதற்கு தான் செலவழிப்பீர்கள்?
No comments