மத்திய
அரசு ஒரு நிறுவனத்தை மூடு வதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும்;
காரணங்களைச் சொல்ல வேண்டும். மக்களுக்குத் தெரிய வேண்டும்; தெரிவிக்க
வேண்டும். ஒன்றைச் செய்வதற்கு முன்னர் அதுபற்றி அரசே செய்திகளை வதந்திகளாக
உலவ விடுவதும் சிக்கல் வரும் என்று தெரிந்தால் கிடப்பில் போடுவதும்
இல்லையேல் சில அமைச்சர்களைப் பேசச் சொல்லி எதிர்வினைஅறிவதும் அரச
தந்திரங்களாக மக்களாட்சியிலும் தொடர வேண்டுமா என்ன?
செம்மொழித்
தமிழ் உயராய்வு மையத்தை முடமாக்கும் நடுவண் அரசின் நடவடிக்கையை எதிர்த்து
ஜூலை 21 வெள்ளி மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமுஎகச
ஆர்ப்பாட்டம்.
செய்வதில்
நேர்மை இருந்
தால் நெஞ்சில் துணிவு வரும்; வெளிப்படைத் தன்மையோடு, வேடம்
போடாமல் வாழ்ந்து போவதைத்தான் வரலாறு போற்றும். மத்திய செம்மொழி நிறுவனத்தை
மத்தியப் பல்கலைக்கழகத்துடன் ஏன் இணைக்க வேண்டும்?
1.செம்மொழி
நிறுவனம் தனித்து இயங்கவேண்டாம் என்று முடிவெடுக்கக் காரணம் மத்திய
அரசுக்கு உள்ள நிதி நெருக்கடி என்று யாரும் சொல்ல முடியாது.
2.தனித்து
இயங்குவதைவிடப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதால் சிறப்பாக இயங்கும் என்று
செம்மொழித் தமிழின்பால் உள்ள அக்கறையால் மத்திய அரசு இந்த முடிவை
எடுத்திருக்கிறது என்று நினைக்கலாமா? இப்படி பாஜகவினரே சொல்வதற்கு இயலாத
வகையில் அண்மைக்கால அவர்களின் மொழிக் கொள்கையும் கீழடி அகழ்வாராய்ச்சிப்
பணிகளில் அவர்களின் ஈடுபாடும் இருக்கின்றன.
3.கூடுதலாக
நிதி ஒதுக்க மத்தியப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கிறார்களா? இன்னொரு
செம்மொழியான சமஸ்கிருதத்திற்கு அப்படித்தான் பாஜக அரசு நிதி ஒதுக்கி
வருகிறதா? தமிழுக்குப் பிறகு தமிழைக் காட்டித்தான் சமஸ்கிருதம் செம்மொழி
அறிந்தேற்பை அரசிடம் பெற்றது. ஆனால் அதற்கும் முன்னரே 1956 இல்
அமைக்கப்பட்ட சமஸ்கிருத ஆணையத்தின் பரிந்துரையில் ராஷ்ட்ரிய சமஸ்கிருத
சான்ஸ்தான் என்ற அமைப்பின் வழியாக மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு
ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி வருகிறது.
15.10.1970இல்
ராஷ்ரிய சமஸ்கிருத சான்ஸ்தான் என்ற அமைப்பு சங்கச் சட்டத்தில் பதிவு
செய்யப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனமும் செம்மொழி
அறிந்தேற்புக்குப் பின் அப்படித்தான் பதிவு செய்யப்பட்டது. ஆனால் ராஷ்ட்ரிய
சமஸ்கிருத சான்ஸ்தான் என்ற அமைப்பின் வழியாக சமஸ்கிருத நிறுவனங்களை
உருவாக்கி அவற்றை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக்கி இருக்கிறார்கள்.
திருப்பதியில் இரண்டும் தில்லியில் இரண்டும் இருக்கின்றன. மேலும் பீகார்,
கேரளா, மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், குஜராத், ஒடிசா, ராஜஸ்தான்
உத்தர்கண்ட், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம் ஆகிய மாநிலங்களிலும்
இருக்கின்றன.
இவையனைத்தும்
மத்திய அரசின் நிதியிலேயே செயற்பட்டு வருகின்றன. தனியாகச் செயற்பட்டுவந்த
சமஸ்கிருத நிறுவனத்தை 7.5.2002 க்குப் பிறகு பல்வேறு மாநிலங்களிலும் நிகர்
நிலைப்பல்கலைக் கழகங்களாக்கி நிதி அளித்துவரும் மத்திய அரசு செம்மொழித்
தமிழாய்வு நிறுவனத்தை மட்டும் முன்னரே இருக்கும் ஒருபல்கலைக்கழகத்தில்
சேர்த்துவிடத் துணிவதில் என்ன காரணம் இருக்க முடியும்? மாநில அரசும் மத்திய
அரசும் தமிழ் அடையாளங்களை மறைப்பதில் போட்டி போட்டுக்கொண்டு
செயற்படுகின்றனவோ என்று நடுநிலையாளர்களையும் யோசிக்க வைக்கின்ற
செயற்பாடுகள் தொடர்கின்றன. அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் பூங்காவின்
பெயரில் செம்மொழி இருந்ததற்காகப் பெயர்ப்பலகையை மறைத்ததோடு பூங்காவையே
சிதைத்தார்கள். தொல்காப்பியர் பெயர் இருந்ததற்காக ஒரு பூங்காவையே புதராக்கி
மூடினார்கள்.
மாநில அரசு
செய்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மத்திய பா.ஜ.க. அரசு, செம்மொழி
நிறுவனத்துக்கு மூடுவிழா நடத்த முன்வந்துள்ளது. தமிழைச் செம்மொழியாக மத்திய
அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழ்ச்சான்றோர்களும் அமைப்புகளும்
போராடிக்கொண்டிருந்த காலம். கட்சி வேறுபாடின்றி அரசியல் கட்சிகளும்
ஆதரவளித்துக் கொண்டிருந்த காலம். முதலமைச்சராகக் கலைஞர் அவர்கள் பொறுப்பில்
இருந்த காலம். முதலமைச்சர் கலைஞரின் குரலுக்குக் காதுகொடுக்க வேண்டிய
கட்டாயத்தில் மத்திய அரசு இருந்த காலம். செம்மொழியாக அறிவிக்கப்பட
வேண்டுமென்பதில் தமிழக அரசு முனைப்புடன் இருந்த காலம்.
ஆனாலும்
மத்திய அரசு காலம் கடத்தி வந்தது. அப்போது நான் தமிழ் வளர்ச்சித்துறை
இயக்குநராக இருந்தேன். தமிழைச் செம்மொழியாக அறிவிக்கத் தேவைப்படும்
ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் இருந்தேன். அப்போது ஒருநாள் பேராசிரியர்
மறைமலை இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சித்துறைக்கு வந்து, தமிழைச்
செம்மொழியாக அறிவிக்க என்ன தடை என்று கேட்டார். நான் ஆதாரங்கள் தேவை
என்றேன். என்ன ஆதாரங்கள் தேவை என்றார்?
1.சமஸ்கிருதத்தைப்போலத்
தமிழையும் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று
சொல்கிறார்கள். சமஸ்கிருதத்தைச் செம்மொழியாக மத்திய அரசு எப்போது
அறிவித்தது? அப்படி அறிவித்த அரசாணை அல்லது, அறிவிக்கை அல்லது நாடாளுமன்ற
நடவடிக்கைக் குறிப்பு இருந்தால் வேண்டும் என்று கேட்டேன். அவர் அரசு
அதிகாரியாக இருக்கிற நீங்கள் தான் அதை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்
என்றார். இல்லாத ஒன்றை எப்படிக் கண்டுபிடிப்பது என்று நான் கேட்டேன்.
அப்போது அவர் சொன்னார், சமஸ்கிருதத்தை அறிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
தமிழை அறிவிக்க வேண்டும் என்றார்.
2.சரி,
உலக வரலாற்றில் இதுவரை எந்த நாடாவது அல்லது எந்த அரசாவது செம்மொழி என்று
ஒரு மொழியை அறிவித்துள்ள சான்று கிடைக்குமா? என்று கேட்டேன்.
3.வழக்கிறந்த
மொழிகளில் சிலதான் செம்மொழிகளாகக் கூறப்படுகின்றன; வாழும் மொழிகளில்
எதையாவது செம்மொழியாக அரசு நிலையில் அறிவித்திருக்கிறார்களா?
4.செம்மொழி
என்று ஒரு மொழியை அறிவிக்க அம்மொழி பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை யாராவது
இதுவரை வரையறை செய்திருக்கிறார்களா? அந்தத் தகுதிகளில் தமிழ்மொழி
பெற்றிருக்கும் தகுதிகள் எவையெவை என்று ஒரு அறிக்கை தரமுடியுமா? என்றும்
கேட்டேன். மத்திய அரசால், தமிழ், செம்மொழி அறிந்தேற்புப் பெறுவதற்கு
முக்கியமான ஆவணங்களுள் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அறிக்கைக்குத் தனியிடம்
உண்டு. முதல்வராகப் பதவியில் இல்லாத நிலையிலும் கலைஞர் அவர்கள் முனைப்புடன்
செயற்பட்டு மத்திய அரசிடமிருந்து தமிழ்ச் செம்மொழி அறிவிக்கையை 12.10.2004
இல் பெற்றுத் தமிழர்களின் நூறாண்டுக் கனவை நிறைவேற்றினார். (தமிழைக்
காட்டிப் பின்னர் சமஸ்கிருதமும் தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் செம்மொழி
அறிந்தேற்புப் பெற்றன.)
மத்திய
அரசின் அறிவிக்கை வந்த பிறகும். செம்மொழி நிறுவனம் வேண்டிப் போராட
வேண்டியிருந்தது. மார்ச் 2006 இல் மைசூரில் இந்திய மொழிகளின் நிறுவனத்தில்
செம்மொழித் தமிழ் நிறுவனம் ஒண்டுக் குடித்தனம் நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டது.கலைஞர் முதல்வர் ஆனதும் செம்மொழி நிறுவனத்தைத் தமிழகம்
கொண்டுவர மீண்டும் போராட வேண்டியிருந்தது. மே19, 2008 இல் செம்மொழி
நிறுவனம் சென்னைக்கு மாற்றப்பட்டது. சென்னையில் அந்த விழாவில் மத்திய
அமைச்சர் அர்ஜூன்சிங் கலந்துகொண்டார். பாலாறு அரசினர் விருந்தகக்
கட்டடத்தில் நிறுவனம் அமைந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பாலாற்றுக்
கட்டடத்திலிருந்த அலுவலகம் அவசரம் அவசரமாகக் காலி செய்யப்பட்டது.
அதற்கென்று
19 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தும் கட்டடம் கட்ட நிதி
ஒதுக்கியிருந்தும் இப்போது போக்குவரத்துத்துறை கட்டடத்தில்
ஒண்டுக்குடித்தனம் நடத்தி வருகிறது செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்.
செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படாத
விருதுகளுக்கு விண்ணப்பம் போட அறிவிப்பைச் செய்து விருதுகளை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழறிஞர்களின் வாய்களை மூடிவிட்டுச்
செம்மொழிதமிழாய்வு நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த முன் வந்திருக்கிறது
மத்திய அரசு.செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மை கருதியே
தொடக்கத்திலேயே எந்தப் பல்கலைக்கழகத்திலும் தொடங்காமல் மைசூரில் உள்ள
இந்திய மொழிகள் நிறுவனத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
மேலும்
செம்மொழி நிறுவனம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே அது சென்னைக்கு
மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கென்று தனி இயக்குநர், பதிவாளர் என்ற
அலுவலர்கள் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்
தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாட்டின் முதலமைச்சர்
அதற்குத் தலைவராக இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. மத்தியப் பல்கலைக்
கழகத்துடன் இணைக்கப்பட்டால் செம்மொழி நிறுவனத்தில் மாநில அரசுக்கு உரிய
உரிமை பறிபோகும். மத்திய அரசு எப்போதும் தமிழுக்கு ஆதரவாக இருக்காது
என்பதைத் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். இப்போது தமிழை
மீட்கவும் காப்பாற்றவும் வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
வரிசைகட்டி
நிற்கின்றன மத, மொழி, அரசியல் ஆதிக்கங்கள்.தமிழ் என்பது, இந்திய
அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணை மொழிகளில் ஒன்று மட்டுமில்லை; எழுத்தில்
கிடைக்கும் இந்தியத் தொன்மையான இலக்கிய மொழி. ஆசீவகம், சமணம், புத்தம்,
கிறிஸ்துவம், இஸ்லாம் உட்பட இந்திய மதங்களின் கருத்துகளின் கொள்கலன்;
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லியும் மொழிபெயர் தேயத்தோர் பலரும்
கலந்து இனிது வாழ்ந்தும் காட்டிய வாழ்க்கையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்பே உலகுக்கு உணர்த்திய மொழி. இலங்கை ஆட்சிமொழிகளில் ஒன்று;
சிங்கப்பூரில் ஆட்சிமொழி; மலேசியாவில் கல்விமொழி, தமிழ்நாடு, புதுச்சேரி,
அந்தமான் நிகோபார் ஆகியவற்றில் ஆட்சிமொழி. எனவே இந்திய மொழிகளில் ஒன்றாக
நினைப்பதை விட உலக மானுட நேயத்தை, நல்லிணக்க வாழ்க்கையை, பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் எனும் பண்பாட்டு விழுமிய வித்துகளைக் கொண்டிருக்கும்
மொழி என்று கருதி அதில் ஆய்வுகள் தொடரவும் தனித்தன்மை காப்பாற்றப்படவும்
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய மொழிகளோடு
அல்ல உலகச் செம்மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வு நடக்கவும் உன்னதங்கள்
வெளிப்படவும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மை காப்பாற்றப்பட
வேண்டும். இணைப்புகளை அரசியலோடு நிறுத்திக் கொள்ளலாமே.
கட்டுரையாளர்: மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம்
No comments